Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

written by Jagannath Srinivasan

   அதிக உடல் எடை, நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு ஒரு பத்தியச்சாப்பாடு என்று பேசினால் சரியாக இருக்கும்

Paleo-Diet-Reviews-From-Creationists-Criticize-The-Caveman-Claim-No-Benefit-665x385

குறைந்த மாவுச்சத்து உணவுமுறைகளில் பேலியோ, கீட்டோ இவையிரண்டும் பிரபலமாக இருக்கிறது. இவற்றின் நீண்டகால விளைவுகள் பத்து வருடங்களில் தெரிந்துவிடும். அதாவது இதனால் உடனடி பலன்கள் இருந்தாலும், அது வேறு பின்விளைவுகளைக் கொடுக்காமல் இருக்கிறதா என்று. இதைப் பற்றி சில ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த உணவுமுறையில் கல்லீரலின் பங்கு அதிகரிக்கிறது. ஏனென்றால் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்குமளவிற்கு கல்லீரல் bile சுரக்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களுக்கு அதிகப் புரதம் இருக்கும் உணவுமுறை ஒத்துவராது. ஆனால் அதிகப் புரதம் சாப்பிடுவதால் சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முறைகளில் தேவையான அளவு புரதம்தான் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆகவே ஏற்கனவே ஆரோக்யமானவர்கள் இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா என்று கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள்.

மூளையின் எரிபொருள் க்ளூகோஸ், கீடோன் ஆகியவை. க்ளூகோஸ் எளிதாகக் கிடைப்பது மாவுச்சத்திலிருந்து. மேலும் கல்லீரலும் புரதத்தை க்ளூகோஸ் ஆக மாற்றும் வேலையைச் செய்கிறது. கீடோன் என்பது கல்லீரல் கொழுப்பிலிருந்து தயாரிப்பது. மூளை க்ளூகோஸ் இருந்தால் கீடோனைக் கண்டுகொள்வதே இல்லை. வண்டியை பெட்ரோலில் ஓட்டாமல் டீசலில் ஓட்டலாம் என்பது மாதிரி மூளையை க்ளூகோஸுக்குப் பதிலாக கீட்டோனில் ஓட்டலாம் என்ற முயற்சி கீடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

அதிலும் கூட கீட்டோனில் முழுதாக ஓட்ட முடியாது. 70-90% தேவைகளுக்கு கீட்டோன், மிச்சத்துக்கு க்ளூகோஸ் என்று கரகாட்டக்காரன் கார் மாதிரிதான் ஓட்ட வேண்டுமாம். பல காலமாக க்ளூகோஸிலேயே ஓடிப் பழகிய மூளை, கீடோசிஸ் முறையில் இயங்க ஆரம்பிக்கச் சில வாரமாகுமாம்.

Paleo-diet

அதன்பின் மூளை வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்துவிடும் என்கிறார்கள். கீட்டோ உணவுமுறையில் வலிப்பு நோய், மறதி நோய் இருந்தவர்களுக்கு முன்னேற்றம் கிடைத்திருக்கிறது என்கிறார்கள். ஆரோக்யமானவர்களுக்கும் இதனால் மூளைச் செயல்பாடு மேம்படும் என்கிறார்கள்.

பேலியோ ஆரோக்யத்தை அதிகரித்து, அறிவைக் குறைக்குமா என்ற கேள்வி முக்கியமானது. குறைந்த மாவுச்சத்து உணவு ஆதரவாளர்கள், ஆதி மனிதன் உணவுக்கு வேட்டையாடியோ, காய் கனிகளை உண்டோ வாழ்ந்த காலத்தில் கீட்டோஸிஸ் முறையில்தான் மூளை இயங்கியது; அந்த நிலைக்குத் திரும்பப் போக வேண்டும் என்கிறார்கள்.

கீட்டோ உணவுமுறையில் அதற்குச் சாத்தியம் இருக்கிறது. பேலியோ முறையில் கொழுப்பை எரித்து உடல் எடைக்குறைப்பையும், சில வியாதிகளிலிருந்து விடுதலையும் பெறலாமே ஒழிய, மொத்தமாக கீட்டோஸிஸ் முறைக்கு மூளையைக் கொண்டு வருவது கஷ்டம். ஆகவே கீட்டோ மூளைச் செயல்பாடுகளில் நிகழ்த்தும் முன்னேற்றங்களை பேலியோ நிகழ்த்துமா என்ற கேள்வி இருக்கிறது.

அடுத்த கேள்வி:

மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து க்ளூகோஸை வைத்து மூளையை இயக்க ஆரம்பித்தபின்தான் பல முன்னேற்றங்களை அடைந்தான். இன்றும் பெரும்பாலும் பேலியோ, குளிர்காலத்தில் கீட்டோவாக இருக்கும் எஸ்கிமோக்கள் போன்ற பழங்குடிகள் பழைய வாழ்க்கைமுறையிலேயே இருக்கிறார்கள்.

paleo-table

க்ளூகோஸுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மூளைச் செயல்பாடு அதிகம் தேவைப்படும் இந்த நூற்றாண்டில் கீடோசிஸ் முறையில் மூளையை இயக்குவது நீண்ட கால நோக்கில் நன்மை பயக்குமா? பேலியோ, கீட்டோ உணவுமுறையில் பெரும் அறிவாளிகள் உருவானால்தான் இந்த சந்தேகம் தீரும்.

இன்றைய நிலையில் பேலியோ, கீட்டோ போன்றவை அதிக உடல் எடை, நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு ஒரு பத்தியச்சாப்பாடு என்று பேசினால் சரியாக இருக்கும். இதை ஒரு சர்வரோக நிவாரணி போலவும், மற்ற உணவுமுறைகள் தவறானவை போலவும் பேசுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேற்கண்ட பிரச்சனைகள் இல்லாதவர்கள் சர்க்கரை, எண்ணெய், உப்பு ஆகியவற்றைக் குறைத்து, புரதத்தைத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு வழக்கமாக சொல்லப்படும் உணவுமுறை நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றுகிறது.

Contact 9841836528 to Advertise here