Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

Written by Siva Raman !

hypo2இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.

இது என்ன பாடல் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குளிர் பொதுவாய் சோம்பேறித்தனத்தை இலவச இணைப்பாகக் கூட்டிக்கொண்டு வரும்.

அய்யோ எழுந்துக்கனுமே என்று இருக்கும். கனமான ஒரு‌ போர்வைக்குள் சுருண்டு ஒளிந்து கொண்டு தூங்கத் தோன்றும். நடுங்கும், மயிர்க்கால்கள் அட்டென்ஷனில்‌ நிற்கும். சிலருக்கு லேசாய் ஒரு பெக் பிராண்டி சாப்பிடவேண்டும் போல இருக்கும்.

சரி. விலங்குகளை உடல்வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறத்தை வைத்து இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். குளிர் இரத்தப் பிராணிகள் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகள்‌.

குளிர் இரத்தப் பிராணிகளால் உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க முடியாது. அவைகளுக்கு சூரிய ஒளி வேண்டும். தம் உடலுக்கும்‌, இரத்தத்திற்கும் வெப்பத்தை சூரிய ஒளியின் மூலம் பெருபவை.

hypo1

நாளின் தொடக்கத்தில் வெயில்‌ படுமாறு கிடந்து பின் தன் வேலைகளைப் பார்க்கப்‌போகும். Basking in the sun என்று ஆங்கிலத்தில்‌ சொல்லாடல் உண்டு. ஊர்வன எல்லாம் இப்படி குளிர் இரத்தப் பிராணிகள்தான்.

மாறாக இந்தப் பாலூட்டிகள் வெப்ப இரத்தப் பிராணிகள். அவற்றின் மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் hypothalamus என்னும் பகுதிதான் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது.

“ஆ காட்டுங்க” என்று டாக்டர் உதறி‌ உதறி வாயில்‌ சொருகும் தெர்மா மீட்டர், உடல் வெப்பநிலையைக் காட்டுகிறது. ஆனால் உடலின்‌ core temperature என்று‌ ஒன்று இருக்கிறது.

நாம் தோராயமாகச் சொல்லுகிற தொன்னூற்று எட்டு சொச்சம் ஃபாரன்ஹீட் என்னும் அளவை விட இந்த core temperature இரண்டு டிகிரி கூடுதலாகவே இருக்கும். பெரும்பான்மை வெப்பம் உடலில் இதயம், கல்லீரல் என்னும்‌ இரண்டு உறுப்புகளின் இயக்கத்தால் வருகிறது.

hypothermia (1)

வெப்ப இழப்பு சருமத்தின் வழியாகவும், கணிசமான அளவு சுவாசிப்பதாலும் நடக்கிறது. இந்த வெப்பநிலையை நிலைநிறுத்துவது உடல் சமநிலை‌ இழக்காமல் இருக்க உதவுகிறது

வெப்பநிலை கூடினால் வியர்வை மூலமாகவும், சருமத்திற்கு அருகில்‌ அதிகம் இரத்தம் பாய்ச்சியும் குளிர்விக்கிறது. குளிர் வந்தால் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்தும், இரத்த ஓட்டத்தை உள்ளுறுப்புகள் பக்கம் மடைமாற்றியும் சமன் செய்யும். இப்படி அது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் core temperature ஒரு குறிப்பிட்ட அளவுக்கு‌க் கீழே விழுவதை நாம் hypothermia என்கிறோம்.

அதீத குளிர், சரியான குளிர்காப்பு‌ உடைகள் அணியாதிருத்தல் என hypothermia விற்கு நிறைய காரணங்கள்‌ இருக்கின்றன. முதலில் உடல்‌நடுக்கம் ஆரம்பிக்கும். தசை அசைவுகள் மூலமாக வெப்பம் உருவாக்க எடுக்கப்படும் முயற்சி இது.

தோல் வெளிறிப் போகும். காரணம் தோலுக்கு அருகில் இருக்கும் இரத்த நாளங்களுக்கு இரத்தம்‌ செல்வதைக் குறைத்துவிடும். லேசாய் மயக்கம் ‌வருவது போலிருத்தல், கைகால் அசைவுகள் பிரச்சனை என்று ஆரம்பித்து, கவனக்குறைவாக விட்டால் வெப்பநிலை மிகவும் குறைந்து இறப்பு கூட நேரிடலாம். தொடர்ச்சியான குளிரினால் செல்கள் இறந்து போய் விரல்களை இழக்க நேரிடலாம்.

Hypothermia-Symptoms-Thermometer1

Hypothermia வைத் தவிர்க்க குளிர்காலத்தில் வெப்பத்தைத் தேக்கி‌ வைக்கும் கம்பளி உடைகளை அணுக வேண்டும். உடல் வெப்பம் குறைந்து ஒருவர் மயங்கி கிடக்கிறார் எனில் அவருக்கு கதகதப்பான ஆடைகள் தர வேண்டும்.

நாடித்துடிப்பு தெளிவாக இல்லையெனில் செயற்கை சுவாசம் கொடுக்கலாம். முக்கியமாக உள்ளங்கை உள்ளங்கால் போன்றவற்றில் வெப்பம்‌ ஏற்ற வேண்டும். திரவப் பொருளாக‌ எதுவும் உண்ணக் கொடுக்கக் கூடாது.

hypothermia (1)

மிக‌முக்கியமாக சாராயம் உட்கொள்ளக் கூடாது. உட்கொண்டவுடன் கதகதப்பாக இருப்பதைப் போல் உணர்வு வந்தாலும் அது மேலும் உடல் வெப்பத்தைக் குறைக்கும். சருமத்திற்கு அருகே இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் வேகமாக இரத்தில் இருக்கும் வெப்பம் வெளியேறும்.

ஒவ்வொரு ஆண்டும்‌ கணிசமான எண்ணிக்கையில் மக்கள் மலையேறும்போதும், பனி‌ பெய்கிற குளிர்காலத்தின்போதும் இந்த hypothermia வால் விரல்களை, சில‌சமயம் உயிரைக் கூட இழக்கிறார்கள். காரணம் கவனக் குறைவும் அறியாமையும்தான். Hypothermia வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்‌ எனவும், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது தெரிந்திருந்தால் நன்மை தானே.

Contact 9841836528 to Advertise here